மகிழ்ச்சியே அழகின் முதற்படி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.பழமொழிகள் முதிர்ந்த அனுபவத்தின் வெளியீடாகவே தோன்றுகின்றன.நிலைத்து நிற்கின்றன.
இந்தப் பழமொழி ஒரு முக்கியமான குறிப்பை நமக்கு அறிவிக்கின்றன.மனம் அழகாக இருந்தால் முகம் அழகாக இருக்கும் என்பதே அது.
மனத்தை அழகாக வைத்துக்கொள்ளாமல் ஆயிரமாயிரம் ரூபாய் செலவு செய்து கண்ட கண்ட மேக்கப் சாதனங்களை வாங்கி வைத்துப் பயன்படுத்தினாலும் அழகு வந்துவிடாது.
மகிழ்ச்சியில்லாத மனத்தில் அழகு மிளிராது.
மகிழ்ச்சி தான் அழகு.
அழகு நமக்கு ஆனந்தை ஏற்படுத்துகிறது என்றோம். ஏன்?
ஆனந்தமாக இருக்கிறோம் என்று உணர்த்தினால், உணர்ந்தால் போதும். ஒரு தனி அழகு அப்போது வெளிப்படும்
சென்ற பதிவில் குறிப்பிட்ட ஐந்து அம்சங்களில் மிகவும் முக்கியமானது மகிழ்ச்சியான மனம் தான். நாம் வெளியே அழகாகத் தோற்றம் அளிக்க வேண்டுமெனில் உள் அழகைப் பாதுகாக்க வேண்டும்.
நமது வாழ்க்கையில் எந்தக் குறைபாடு இருப்பினும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மகிழ்ச்சியாக இருப்பது மூச்சு விடுவதையும், உணவு உண்பதையும் போல ஒரு முக்கியத் தேவை. ஏன், ஒரு கடமை என்றும் கருத வேண்டும்.
மகிழ்ச்சி கூட ஒரு மனப் பயிற்சி தான். எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த எண்ணம் வேண்டும். உறுதி வேண்டும். அதைக் கடைப்பிடித்தால் விரைவில் நாம் மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்குவோம்.
மனதில் மகிழ்ச்சி பெருகக் காசு பணம் தேவை இல்லை. முயற்சி செய்யும் மனமே போதும். எந்தச் சூழ்நிலையிலும் கவலையை வெளிக் காட்டக் கூடாது. கண்ணியமான புன்னகையுடன் முகம் காட்சி அளிக்க வேண்டும். மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம்.
உடல்நலம்
உடல் நலமாக இருந்தால் மனதில் மகிழ்ச்சி தானாகவே உண்டாகும். உடல் நலத்தை அக்கறையோடு பாதுகாக்க வேண்டும்.
ஓய்வில்லாத உழைப்பு, கவலையுடன் இருத்தல், போதுமான தூக்கம் இல்லாமை, மலச்சிக்கல் இவை தான் உடல் நலத்தைப் பாதிக்கும் அம்சங்கள்.
எனவே, நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கலாம். அப்போது இடையிடையே 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை ஓய்வு எடுத்துக் கொள்ளவும். பிறகு, உங்கள் வேலையைத் தொடர்ந்து செய்யவும்.
ஓய்வு என்பது என்ன? செய்கிற வேலையை நிறுத்தி விட்டு, வேறு ஒரு வேலையில் கவனத்தைச் செலுத்துதல். ஓர் இனிய இசையைக் கேட்கலாம். அல்லது, எழுந்து சிறிது தூரம் நடக்கலாம், கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யலாம்.
சமச்சீரான சத்துக்கள் கொண்ட உணவுப் பொருட்கள்
கார்போ ஹைட்ரேட் - அரிசி, கோதுமை, கிழங்கு வகைகள். இவை உடலின் இயக்க ஆற்றலுக்கான எரிபொருளைத் தரும் ஸ்டார்ச் பொருளைத் தருகின்றன.
புரோட்டின் எனப்படும் புரதம் - பருப்பு வகைகள், மீன், பால், முட்டை ஆகியவற்றில் உள்ளது. இது திசுக்களின் வளர்ச்சிக்கும், உடலின் இயக்க சக்திக்கும் உதவுகிறது.
கொழுப்பு இறைச்சி பால் பொருள்களில் உள்ளது. இதுவும் உடல் இயக்கத்திற்கு மிகவும் தேவையாகும்.
வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, ஈ - இவைகள் பச்சைக் காய்கறிகள், கீரை, பழங்கள் ஆகியவற்றில் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை நமக்குத் தருகின்றன.
தாது உப்புக்கள் - உடலின் இயக்கத்திற்குத் தேவையான பல திரவங்கள் உடலில் சுரக்க உதவுகின்றன. காய்கறி, பழங்கள், கீரைகளில் தாது உப்புக்கள் உள்ளன. இவற்றின் அளவு குறையாமல் சரியான விகிதத்தில் அமைந்த உணவு தான் சமச்சீரானது.
முக்கியமாகப் பருப்பு வகைகள், கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், சமச்சீரான சத்துணவை நமக்கு வழங்கும். எனவே, தவறாமல் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்ப்பது நல்லது.
நோய்வாய்ப்பட்ட நிலையில் சருமம் வறண்டு விடும். கருத்துப் போகும். உதட்டில் வெடிப்பு மற்றும் புண்கள் வரும். நகங்களில் பள்ளம் விழும். சமச்சீரான சத்துணவு கிடைக்க மேற்கண்ட பொருட்களை உட்கொள்வதால், நாம் நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
உடல் சுத்தம்
தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது சுத்தத்தின் முதல் படி குளிக்கும் போது, உடலின் எல்லா உறுப்புக்களையும் நன்கு சோப்பு போட்டு தேய்த்துக் குளிக்கவும்.
தலை முடியில் அழுக்குப் போகத் தினமும் குளிக்க வேண்டும். தினமும் தூய்மையான தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து கூந்தலை வாரவும்.
அன்றாடம் உடுத்திக் கொள்ளும் ஆடை, துவைத்துத் தூய்மை உள்ளதாக இருக்க வேண்டும். ஒருநாள் அணிந்த உடையை அடுத்த நாளும் அணியக் கூடாது.
உடற்பயிற்சி
உடற் பயிற்சி என்றதும் ஜிம்மிற்குப் போய் வியர்வை சொட்டச் சொட்டக் கடுமையான பயிற்சி செய்ய வேண்டியதில்லை. எளிய சூரிய நமஸ்காரம், யோகாசனம், நடைப்பயிற்சி, உடலின் எல்லா உறுப்புக்களுக்கும் உழைப்பு தரும் லேசான உடற் பயிற்சி போதும்.
இந்தப் பயிற்சிகளும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை செய்தாலே போதுமானது. ஆனால், தினமும் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும்.
சருமம்
நமது உடல் முழுவதும் சருமத்தினால் மூடப்பட்டு உள்ளது. இதைத் தான் வெளித் தோல், உள் தோல் என்று கூறுகிறோம். ஒருவரது சருமம் தான் நிறத்தினாலும், மென்மையினாலும் அவரது அழகை நிர்ணயம் செய்கிறது.
சருமம் என்பது மூன்று உறை அடுக்குகள் கொண்டது. வெளிப் பகுதி “எபிடெர்மிஸ்” எனப்படும். நடுப்பகுதி டெர்மிஸ் எனப்படும். அடிப்பகுதி சப்குடேனியஸ் எனப்படும்.
இந்த மூன்று அடுக்குகளும் திசுக்களால் ஆனவை. மேலும், “மெலனோசைடர்” என்னும் பல இலட்சக் கணக்கான செல்களால் அமைந்தது தான் சருமம். இதுதான், நிறத்தை அமைக்கும் மெலனின் என்ற திரவத்தைச் சுரக்கிறது.
இதுதான் ஒருவரின் முடி, கண்கள் மற்றும் சருமத்தின் நிறத்தைத் தீர்மானிப்பது ஆகும். மேலும், மெலனின் சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஒருவரைத் தாக்காமல் பாதுகாக்கிறது.
சூரியனுடைய கதிர்கள் ஒருவரைத் தாக்குவது அதிகரிக்கும் போது தோலைப் பாதுகாப்பதற்காக எபிடெர்மிசின் கீழ்ப் பகுதி மேலே வருகிறது. அதுதான் வேர்க்குரு.
சருமத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், நம் மீது அதிகமாக வெய்யில் படாமல் இருக்க வேண்டும். அடுத்து, ஒருவரது வயது அதிகரிக்க, அதிகரிக்க சருமம் மெலிந்து விடும்.
எபிடெர்மிஸில் 3,000,000 இலட்சம் உயிர் அணுக்கள் உள்ளன. சருமத்திலுள்ள செல்கள் ஒவ்வொரு வினாடியும் இறந்து கொண்டே இருக்கின்றன. இறந்து போன அணுக்கள் நாம் குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் வெளியேற்றப் படுகின்றன. மேலும், புதிதாகப் பிறந்து கொண்டே வருகின்றன.
எபிடெர்மிஸ், டெர்மிஸைப் பாதுகாக்கிறது. டெர்மிஸில் இரத்தக் குழாய்கள், நரம்புகள், வியர்வைச் சுரப்பிகள், முடி சுரப்பிகள், சபேஷியஸ் சுரப்பிகள் ஆகியவை உள்ளன.
சபேஷியஸ் சுரப்பிகள் சீபம் என்னும் கொழுப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. சீபம் தான் நமது சருமத்திற்குத் தேவையான எண்ணெய்ப் பசையைக் கொடுத்து, வியர்வையுடன் சேர்ந்து மென்மையாகவும், ஈரப் பசையுடனும் வைத்துள்ளது.
சீபம் அதிகமாக இருந்தால் சருமம் எண்ணெய்க் கசிவு உள்ளதாகத் தோன்றும். சீபம் குறைவாக இருந்தால் உலர்ந்த தன்மை உடையதாக இருக்கும்.
குளிர் காலங்கள் மற்றும் குளிர்ப் பிரதேசங்களில் சீபம் மிகக் குறைவாக உற்பத்தி ஆகும். எனவே தான், அப்போது சருமம் வறட்சியாகத் தெரிகிறது. இதனால் தான் சருமத்தின் மேல் சுருக்கங்களும், கோடுகளும் வருகின்றன.வயது அதிகம் ஆனது போல் தோற்றம் அளிக்கும். எனவே, அதற்கு மாயிஸ்சரைசர் அல்லது கோல்டு க்ரீம் தடவ வேண்டும்.